
கற்பக விநாயகர், பிள்ளையார்பட்டி
தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் மிகவும் முதன்மையானது இந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தான். காலம் கடந்த தலைசிறந்த சிற்ப வேலைகள், நேர்த்தியான கோயில் வளாகம் மற்றும் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆலயம் ஆகியவை இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும்.
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிளின் மூலவர் மற்ற விநாயகர் கோவில்களில் உள்ளது போன்று அல்லாமல் இரு கரங்களுடன் வீற்றிரிக்கிறார். ஆறடி உயர சிலையில் ஆடை, நகைகள், மாலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிற விநாயக பெருமானைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் குவிகின்றனர்.
மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை நேரில் காண்பது என்பது ஒரு அரிய வாய்ப்பாகும்.
மதுரையிலிருந்து 70 கிமீ தொலைவில் பாரம்பரிய நகரமான பிள்ளையார்பட்டியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ரயில் அல்லது பேருந்துகள் மூலம் காரைக்குடி அல்லது மதுரைக்கு சென்று அங்கிருந்து கோவிலை அடையலாம்.

உச்சி பிள்ளையார் கோவில், திருச்சி
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் இந்த உச்சி பிள்ளையார் கோவில் ஆகும். ராக்ஃபோர்ட் கணபதி கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் இமாலய மலைகளை விடவும் பழமையான, உலகின் மிகப் பழமையான பாறை என்று நம்பப்படும் பாறை வகையின் மேல் அமைந்துள்ளது.
தனித்துவமான கட்டிட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். பிரதான தெய்வத்தை தரிசிக்க 344 படிகள் ஏறி பக்தர்கள் பிரதான கோயில் வளாகத்தை அடைய வேண்டும். இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மிக பிரமாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது.
திருச்சி மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து சீரான பேருந்து வசதியையும் ரயில் சேவையையும் கொண்டுள்ளது. ஆகவே இந்தக் கோவிலை அடைவது மிகவும் எளிது.

மணக்குள விநாயகர் கோவில், பாண்டிச்சேரி
பிரஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் புதுச்சேரியின் ஒயிட் டவுனில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை பல முறை கடலில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆனால் அது ஒவ்வொரு நாளும் அதே இடத்தில் மீண்டும் தோன்றி, வழிபாட்டாளர்களிடையே பிரபலமானது.
இன்றுவரை, இந்த சிலை பிரெஞ்சு காலனியின் மையத்தில் அதே இடத்தில் உள்ளது. புதுச்சேரியின் மணக்குளாரை தரிசிப்பவர்களுக்கு வேண்டும் என்கிற வரமெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விநாயகர் சதுர்த்தி பெருவிழா இங்கு மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கணபதியைக் காண விடியற்காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதும்.நீங்களும் விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே சென்று வாருங்கள்.

வரசித்தி விநாயகர் கோவில், சென்னை
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குலாலர்கள் எனப்படும் ஏராளமான குயவர்கள் இப்பகுதியில் குடியேறி, தங்கள் வழிபாட்டிற்காக சிறிய கோவிலை வடிவமைத்து விநாயகர் பெருமானை வழிபட்டு வந்தனர்.
சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, ஆண்டு விழா என ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு கோலாகலத்துடன் இந்தக் கோவில் காணப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்திற்கு ஏராளமான ஆன்மிக அன்பர்கள் வந்து தரிசித்து வரசித்தி விநாயகரின் அருளைப் பெற்று செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று கோலாகலமாக இருக்கும் இந்த ஆலயத்திற்கு நீங்கள் சென்று வருவது மிகவும் நன்மை பயக்கும்.
சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவிலும், எழும்பூர் – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மெரினா கடற்கரை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக கோயிலை அடையலாம்.

பொய்யாமொழி விநாயகர் கோவில், தீவனுர்
விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிப்பவர் இந்த அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார் ஆவார்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிறுவர்கள் கண்டெடுத்து, நெல்குத்திப் பயன்படுத்திய இந்த லிங்க விநாயகத் திருமேனியே பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு பொய்யாமொழி பிள்ளையார் என்றும் வணங்கப்படுகிறார்.
புது வீடு கட்டியவர்கள், புதிய வாகனம் வாங்கியவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்வது இங்கு வழக்கம். சுற்றுவட்டார மாவட்டங்களில் யாருக்குத் திருமணம் நடைபெற்றாலும் இங்கு வந்து புதுமணத் தம்பதிகள் பிள்ளையாரின் ஆசி வாங்கிச் செல்கிறார்கள்.எப்போதும் பல அதிசயங்களையும் அற்புத அனுபவங்களையும் அளிக்கும் இந்தப் பிள்ளையார் தமிழகத்தின் பிரசித்திபெற்ற கணபதிகளில் ஒருவர் என்பதே உண்மை.
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது தீவனூர். திருவண்ணாமலைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ளதால் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி இங்கு வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. நீங்கள் இந்த நன்னாளில் இங்கு செல்வது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நீங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று நம் நாட்டில் இந்த கோவில்களுக்கு அருகாமையில் இருந்தால் நிச்சயம் முழு முதற் கடவுளை வணங்கி ஆசி பெற்றிடுங்கள்!